ராமேஸ்வரமும் இலங்கையும் இணையும் அந்தப் பகுதியில் அடிக்கடல் ஆராய்ச்சி செய்தால் கண்டிப்பாக மனிதன் வாழ்ந்த இடங்களும் சான்றுகளும் கிடைக்கும் என்பதில் எனக்கு இம்மியளவும் சந்தேகமில்லை. தனுஸ்கோடி என்ற நகரம் அழிந்து போயிருக்கிறது. தனுஸ்கோடியும் அதன் சுற்றுப்புற மனிதன் வாழ்ந்த இடங்களும் கடலுக்கடியில்தான் இருக்கின்றன. மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்தாலுமே, உடனே ராமர் என்று தாவிவிடக் கூடாது. மனிதன் கற்காலத்திலிருந்து பல ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான். கற்காலத்திலேயே கல்லைக் கல்லால் செதுக்கியிருக்கிறான். அப்படி செதுக்கப் பட்ட ஒரு கல் கிடைத்தால், அங்கு ஒரு மனிதன் வந்துபோயிருந்திருக்கிறான் என்பதுதான் தகவலே தவிர வேறெதுவுமில்லை. இலங்கையும் ராமேஸ்வரமும் இணையும் இந்தப் பகுதியில் தொன்றுதொட்டே இரு நிலப் பகுதிகளுக்குமிடையில் கடல்போக்குவரத்து, மீன்பிடித்தல் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்கான அடையாளங்களும் இந்தக் கடல்பகுதியில் இருக்கத்தான் செய்யும். கிரேக்கம் (Greeks) மற்றும் ரோமானியர் (Romans) போன்ற வேற்று நாட்டவரும் வணிகம் பொருட்டு கடல்வழியாக நம் நாட்டிற்கு வந்துபோய்க் கொண்டுதானிருந்தனர். நம்பகுதியின் கடல்குணம் சரிவரத்தெரியாமல் அவர்களின் கப்பல்கள் உடைந்துபோய்த்தானிருக்கின்றன. அதற்கான அடையாளங்களும் கடலுக்கடியில் கிடைக்கும்தான். மனிதனுக்கு முன்னிருந்தே, மற்றும் மனிதன் வாழ்ந்த காலத்திலும்கூட மரங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மரத்துண்டுகள் கிடைத்தாலுமே மரத்துண்டுகளை மட்டும் வைத்தும் எந்த முடிவுக்கும் வர இயலாது. ஆதாரம் வைத்து ஒரு விசயத்தை உறுதிசெய்வதற்கு நிறய விசயங்களைக் கவனிக்கவேண்டும்.

செயற்கைக்கோள் படத்தை மட்டும் வைத்து இயற்கையா மனிதன் கட்டியதா என்று சொல்லமுடியாது என்ற வாக்கியத்தில் எங்கிருந்து மனிதன் கட்டியதுதான் என்று சிலருக்குப் புரிகிறது என்பது எனக்குப் புரியாத புதிர். இயற்கை என்று உன்னால் உறுதியாகச் சொல்ல முடியாதுதானே அப்படியானால் இது மனிதன் கட்டியதுதான் என்பது முட்டாள்தனம். மனிதன் கட்டியதுதான் என்பதை உறுதிப் படுத்தத்தான் நிறைய ஆதாரங்கள் வேண்டும். அதிலும் இந்த காலகட்டத்திற்குரியது இந்த ஆதாரம் அல்லது அமைப்பு என்பதற்கு நிறையவே ஆதாரம் வேண்டும். இயற்கை அமைப்புகளை இயற்கை process மூலம் விளக்க முடியும். வேறு சில இடங்களில் இதேபோன்ற அமைப்புகள் இருந்தால் அந்த உதாரணங்களையும் ஒத்துப் பார்த்து சந்தேகத்துக்கு இடமின்றி இது இயற்கை அமைப்பே என்பதை உறுதிப் படுத்த முடியும். இவர் எழுதியிருப்பதைப் பார்க்கவும்.
ராமர் வாழ்ந்ததாகக் கருதப்படும் காலகட்டம் பற்றிய கருத்திலேயே எல்லோருக்கும் ஒருமித்த கருத்து இல்லை. 1.7மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனே இல்லை. சிலர் 17மில்லியன் என்று புள்ளியை மறந்து காலகட்டத்தை இன்னும் பின்னோக்கிக் கொண்டுபோய் தங்கள் வாதத்தின் முட்டாள்தனத்தை இன்னும் கூட்டிக் கொள்கிறார்கள். 3000-4000 கிபி என்ற வாதம் ஓரளவு பரவாயில்லை.
பனி வயது (Ice age)

*6000 வருடங்களுக்கு முன்னால் மனிதன் சிறு சிறு கூட்டங்களாக வசித்திருப்பான். பனி உருகி கடல் பொங்கியது போன்ற இயற்கை இடுக்காடுகளில் இருந்து தப்பிப் பிழைத்தவன் வாய்க்கதைகளாக சில விசயங்களை சொல்லி வைத்திருப்பான். வாய்க்கதைகள் கதைநூல்களாக ஆகியிருக்கலாம். ராமனும் வாழ்ந்திருந்திருக்கலாம், வாய்வழிக் கதையாய் ஆகியிருக்கலாம்; வால்மீகியும் அதைப் பின்னர் கதையாக எழுதியிருக்கலாம். ஆனால், இதை உறுதிப் படுத்தி அதன்மூலம் ஒரு இடத்தை தொன்மை வாய்ந்த கட்டிட அமைப்பு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென்றால், ஆதாரங்கள் வேண்டும். வால்மீகியின் புத்தகம் ஆதாரமல்ல. யார் ஆண்டார் யார் வாழ்ந்தார் என்ற விபரமே இல்லையென்றாலும், மனிதன் கட்டிய கட்டிடங்கள் கிடைத்ததால் மட்டுமே மொஹஞ்சதாரோவும் ஹரப்பாவும் பாதுகாக்கப் படுகின்றன. ராமர் பற்றிய ஆதாரமே தேவையில்லை. இருக்கின்ற பாலம் மனிதன் கட்டியது என்ற ஆதாரம் கிடைத்தால் மட்டுமே எந்தப் பகுதியையும் இந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாப்புக்குக் கொண்டுவரமுடியும். இயற்கை அமைப்பாக இருக்கும்பொழுது அப்படிச் செய்ய இயலாது.
No comments:
Post a Comment