Monday, 26 March 2012

சிந்திக்கச் சில அமுத மொழிகள் ..!


சில வருடங்களுக்கு முன்னே ஒரு நாள். திருவானைக்கா, ரங்கன், தாயுமானவர், உச்சிப் பிள்ளையார், சமயபுரம் என்று ஒரு இரண்டு நாட்களுக்கு புரோகிராம் போட்டு திருச்சியில் இருந்த நண்பர் வீட்டில் போய் இறங்கியாச்சு... நண்பருக்கு ஒரு நான்கு வயது குழந்தை. ரொம்ப சமர்த்து.   , "அங்கிள் ஒரு கதை சொல்லுங்களேன்" என்று , கொஞ்சி கெஞ்சிக் கேட்க ---- ரொம்ப சுவாரஸ்யமாக (?)  - பகவான் ராமகிருஷ்ணர் கதையை சொல்லிக் கொண்டு இருந்தேன்......

குழந்தைக்கு ரொம்ப போர் அடிக்குமென்று நானாகவே நினைத்துக் கொண்டு - நீட்டி , முழக்கி -
" காளி கோயில் பூசாரியாக இருந்தார் குருநாதர் - ரொம்ப நாளா பூஜை பண்ணிவிட்டு - ஒருநாள் சாமி வரலையேன்னு உயிரையே விடப் போனவருக்கு , முதன் முறையா - சாமி தரிசனம் கிடைத்து , அதன் பிறகு - தட்சிணேஸ்வரத்தில் இருந்த காளியை அனுதினமும் தரிசித்தவர்.அதுக்கு அப்புறம் சுவாமி விவேகானந்தருக்கும் - அம்மன் தரிசனம் கிடைக்க செய்தாராம்".

 " சாமி நேர்ல வந்துச்சு. அதை அவர் இன்னொருத்தருக்கும் காட்டி இருந்து இருக்காரு, எப்பேர் பட்ட மகான்  " னு ரெண்டு , மூணு தடவை சொன்னேன். அப்படியே , சும்மா டிஜிட்டல் எபக்ட்ல சீன் போட்டுக் கிட்டு பேசிக்கிட்டு போக .... ஊம் , ஊம் ன்னு கேட்டுக் கிட்டு இருந்த குழந்தை டக்குன்னு குறுக்கிட்டான்..

"அங்கிள் - ஏன் இதை ரொம்ப ஓவரா பில்ட் அப் கொடுத்து சொல்றீங்க..?"
(இந்த காலத்துப் பசங்க - பயங்கர ஷார்ப். )

"இல்லை , அவருக்கு சாமி நேர்ல வந்து தரிசனம் கொடுத்தது - நிஜம். அதை நீ நம்பணும் இல்லே ... அதான் "

" அது நிஜம் தானே.. . நான் நம்புறேனே ..."

அதானே , அவன் நம்ப மாட்டான்னு நாமளே எப்படி முடிவு பண்ணலாம்? - இது மனக்குரல்.

"இல்லைடா , சாமி வந்துச்சுன்னு - உங்க அப்பா கிட்ட சொல்லிப் பாரு.... ஹ்ம்ம். .. சரி அப்புறம் . அதுக்கு என்னன்னு கேட்பான். அப்படியான்னு . உன்னை மாதிரி இயல்பா, முழுசா நம்பி ஊம் சொல்ல மாட்டான்.. புரியுதா?" 

"ஏன், நம்புவாரே! போன மாசம் கூட - அப்பா , என்னை ஸ்ரீரங்கம்  கூட்டிப் போனாரே... சாமி , நாங்க போகும்போது தூங்கிக் கிட்டு இருந்தாரு. நான் டிஸ்டர்ப் பண்ணலை. சத்தமே போடலை. ஆனா, கோவில்ல இருந்த நிறைய அங்கிள் , தாத்தா எல்லாம் - ரங்கா, ரங்கா னு சத்தம் போட்டு கூப்பிட்டுக் கிட்டு இருந்தாங்க சாமியைப் பார்த்து ...   " ன்னு சொன்னான். 

நானும் குழந்தையாகவே இருந்து இருக்க கூடாதான்னு ஏங்கினேன் , அந்த நிமிஷம்...  கண்ணில தண்ணி எட்டிப் பார்த்திடுச்சு.... 

நாயக்கர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா ன்னு - வேதம் புதிது படத்துல - சத்தியராஜை , ஆத்துல  இருந்து ஒரு கை , படார் படார்னு  அடிக்குமே - அந்த ஞாபகம் தான் வந்தது... யாருப்பா சொன்னது , குழந்தைகள்னா விவரம் பத்தாதுன்னு.... விவரம் தெரியிறதுன்னா என்ன - சாமியை கல்லா பார்க்கிறதா..?   

எவ்வளவு , அப்பழுக்கற்ற நம்பிக்கை....! 

அதன் பிறகு, நான் கோவிலுக்குச் செல்லும்போது - எப்படி உணர்ந்து இருப்பேன் என்பதை , சொல்லித் தான் தெரிய வேண்டுமா?

நமக்கு எப்படி சொல்லிக் கொடுத்து இருப்பாங்களோ , அப்படித்தான் நாம நம்பத் தொடங்குவோம்..! இது சம்பந்தமா, கீழே ஒரு குட்டிக் கதை இருக்கு. படித்துப் பாருங்கள்..! 

கோவிலுக்குப் போனா, சாமி எல்லாம் பாத்துக்கிடுவாருன்னு சின்ன வயசுல நல்ல விதையைத்தான் போடுறோம்...  ஆனா, அந்த நம்பிக்கையை நாமே வைச்சுக்கிடுறது இல்லை... நமக்கே நம்பிக்கை இல்லாம போன பிறகு, குழந்தைகள் வளர்ந்த பிறகு, அவங்களும் - கல்லா பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்... இப்போ, நாம இருக்கிற மாதிரி...

கடவுளைப் பார்த்து இருக்கிறார்னு - இப்போ யாரு , நம்ம முன்னே வந்து சொன்னாலும் - அடக்க மாட்டாம சிரிப்பே வந்துடும். யாரை ஏமாத்த..? 
நான்லாம் பார்க்கலை - நீ பார்த்து இருப்பியோ? அம்புட்டுப் பேரும் - சாமி பேர்ல ஏமாத்துற ஆளுங்க தான்பா... இதுல ராமகிருஷ்ணர் - காளியைப் பாத்ததா சொன்னா - அது ஒரு கதை மாதிரி தான் தெரியும்.. 

இப்போ என்ன, அவர் இருக்காரா என்ன ?  யாரும் விசாரிக்க? அளந்து விடு.. ஹ்ம்ம் .. அப்புறம்..! மனசு நம்ப தயாரா இல்லை. நான் கடவுள் இருப்பதை நம்பத் தயாராக இல்லை. ஒரு வேளை , கடவுள் இருக்கிறது நம்ம மனசுக்கு புடிக்கலையோ? இப்படியே இருந்தும் , இல்லாம இருக்கிறது தான் நல்லதுன்னு நினைக்குதோ?

ஆனாலும், கோவிலுக்குப் போவோம்... எனக்கு அது வேணும், இது வேணும்னு கேட்போம்... கொடுக்கிறாரோ, இல்லையோ - வேண்டுதல் தொடரும் , அதே அரை குறை நம்பிக்கையில்... 
சரி, இன்னைக்கு - சில சிந்தனைத் துளிகள் பார்க்கப் போறோம்.... வழக்கம்போல, படிச்சதும் கொஞ்ச நாள்ல மறந்து விடாமல், கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.... 

பொறுமையாகப் படியுங்கள்..! ஏதாவது ஒரு கருத்து - நிச்சயம் உங்கள் மனதில் தங்கி - உங்களை நிச்சயம் நல்வழிப்படுத்தும் என்று நினைக்கிறேன்..!

முதல்ல ஒரு சின்ன கதை....
  
அந்தப் பூனை நாயிடம் சொல்லிக் கொண்டிருந்தது.
“நம்பிக்கையைக் கைவிடாமல் கடவுளைத் தொடர்ந்து வழிபடு. நிச்சயம் அவர் உனக்கு ஒருநாள் அருளுவார். அவரது கருணைப் பார்வை உன் மேல் பட்டுவிட்டால் வானத்திலிருந்து எலிகளாகப் பொழியும். நீ வேண்டிய அளவு சாப்பிட்டு மகிழலாம்”

இதைக்கேட்ட நாய் புரண்டு புரண்டு சிரித்தது.

“அட முட்டாளே, எனக்கு ஒன்றுமே தெரியாது என்று முடிவு கட்டி விட்டாயா? என் வீட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் முன்னோர்களும் எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். மனமுருகிப் பிரார்த்தனை செய்தால், எலி மழை பெய்யாது. எலும்பு மழைதான் பெய்யும். எடுத்து ஆசை தீரக் கடித்து மகிழலாம்.” திரு.சொக்கன் அவர்கள் எழுதிய அவரவர் மழை கதை. (மிட்டாய்க் கதைகள் புத்தகத்திலிருந்து )

கடவுளை சுத்த சைவராக மதித்து சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், புளியோதரை நைவேத்யம் செய்கிறவர்களும் இருக்கிறார்கள், கடா வெட்டி, சாராயம் சுருட்டு படைக்கிறவர்களும் இருக்கிறார்கள். கடவுளை அவரவர் எப்படி எந்த கண்ணோட்டத்தில் உணர்கிறார்கள் என்பதை பொறுத்துத்தான் இருக்கிறது.

=========================================================
மூதறிஞர் ராஜாஜி 

* குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க குளத்திற்குப் போனால், தெளிந்த நீரை மேலாக எடுத்துவருவது தான் சிறந்தது. அதை விடுத்து, குளத்துக்குள் இறங்கி கலக்கினால் சேறு மேலே வந்து விடும். அதுபோல பக்தியிலும் மிதமான நிலையே போதுமானது.

* மிதமிஞ்சிய சமய அறிவு, மற்றவருடன் வாதங்களில் ஈடுபடுதல் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதால் மூளையைக் குழப்பிக் கொள்ள நேரிடும். நம்முடைய அறிவு சிற்றறிவு. கடவுளோ பேரறிவாளராக இருக்கிறார். அதனால், நம்முடைய அறிவைக் கொண்டு அவரை அளக்க முடியாது.

* தயிருக்குள் இருக்கும் வெண்ணெய் போன்று கடவுள் மறைந்து விளங்குகிறார். அவரைக் காண வேண்டுமென்று விரும்பினால் உள்ளத்தைப் பக்தியால் கடைய வேண்டும். தத்துவ ஞானத்தை வளர்த்துக் கொண்டால் புலமை தான் வளருமே ஒழிய, ஞானம் உண்டாகாது.

* பக்தியில் உறுதியாக நில்லுங்கள். எளியதியானப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். மனம் ஒன்றி இறைவனை வழிபடுங்கள். கடவுளின் பூரண அருளை நிச்சயம் பெற்று மகிழ்வீர்கள்.

ரமண மகரிஷி :

* அருளின் உயர்ந்தவடிவம் மவுனமாக இருப்பதாகும். வலிமையற்ற மனம் படைத்தவர்களுக்கு மவுனமாக இருக்க முடியாது.

* நான் யார் என்ற கேள்வியைக் கேளுங்கள். பதிலை உங்களுக்குள்ளே தேடுங்கள். பிறவியைத் தவிர்க்கும் உபாயம் இதுவே.

* குப்பையை ஆராய்வதால் பயன் விளைவதில்லை. அதுபோல, பிரபஞ்சத்தை ஆராய்வதாலும் பயன் இருக்கப் போவதில்லை. நமக்குள் இருந்து இயக்கும் ஆண்டவனைத் தேடுங்கள்.

* இறைவன் நமக்குள் இருக்கிறான் என்று தெளிவாக உணர்ந்தவர்கள் தவறு செய்வதில்லை. செய்தாலும் வருந்தி தங்களைத் திருத்திக் கொள்வார்கள்.

* அகந்தை இருக்குமிடத்தில் ஆண்டவன் ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டான். "நான்' "எனது' என்று எண்ணிக்கொண்டு செயலாற்றுபவர்கள் எந்தகாலத்திலும் ஆண்டவனை அடையவே முடியாது.

* ரயில் ஓடும் போது சுமையை நாம் தூக்க வேண்டியதில்லை. அதுபோல, ஆண்டவனிடம் நம்மை ஒப்படைத்தபின் உலகியல் பிரச்னைகள் நம்மைத் தீண்டுவதில்லை.

* அரைகுறையாக ஆண்டவனை நம்புவதால் ஒருபயனும் இல்லை. முழுமையான சரணாகதி அடைந்தால் மட்டுமே அவன் பார்வை நம்மீது விழும்.

 ===============================================================

காஞ்சிப் பெரியவர் :

குழந்தையாக இரு என்று உபநிடதம் நமக்கு உபதேசம் செய்கிறது. பிள்ளை மனதில் கள்ளம் கபடம் சிறிதும் இருப்பதில்லை.

* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால் திருப்தி பெற முடியாது. நமக்கு அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்வது நல்லது.

* மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்கவேண்டும்.

* எடுத்துச் சொல்வதைவிட, எடுத்துக்காட்டாக வாழ்வதே அதிக சக்திவாய்ந்தது.

* ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுளே குடிகொண்டிருக்கிறார். ஒருவரை வணங்கும்போது அவருக் குள் இருக்கும் கடவுளையே வழிபாடு செய்கிறோம்.

* சுவரில் எறிந்த பந்து திரும்பிவருவதைப் போல, நிறைவேறாத ஆசைகள் கோபமாகத் திரும்பி நம்மை வந்து தாக்கிவிடும்.

* ஓடி ஓடிச் சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள்தேடி அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.


* பொம்மலாட்டப் பொம்மை போல சகல உயிர்களுக்கும் உள்ளிருந்து கடவுளே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.

* வழியில் கிடக்கும் முள்ளையோ, கண்ணாடியையோ அப்புறப்படுத்த பணம் ஏதும் தேவையில்லை. சிறு அளவிலான உதவிகளை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.
 ===========================================================

வேதாத்திரி மகரிஷி :

* எல்லாருக்கும் நன்மை உண்டாகவேண்டும் என்று எண்ணுவதே நல்லவர்களின் குணமாகும். உள்ளதைச் சொல்லுங்கள். நல்லதை எண்ணுங்கள். நல்லதைச் செய்யுங்கள். நல்லவனாகவே வாழுங்கள்.

* மனிதன் முழுமை பெறவேண்டுமானால் பரம்பொருளோடு ஒன்றுவது தான் ஒரே வழி.

* படிப்படியாக மட்டுமே நல்ல பண்புகளைப் பழகிக் கொள்ள முடியும். ஒரேநாளில் எந்த விஷயத்தையும் கற்றுவிட முடியாது.

* மனத்தூய்மை, சத்துள்ள உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு நல்வாழ்க்கைக்கு  அடிப்படை விஷயங்கள்.

* துன்பம் என்பது அறவே இல்லாத மகிழ்ச்சியான அனுபவங்களையே நாம் பெற எண்ணுகிறோம். ஆனால், அதற்கான வழிமுறைகளைத் தான் அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.

* கோபமின்றி வாழ்வதே உயர் வாழ்வின் அடிப்படை குணம். சினமில்லாதவன் ஞானப்பாதையில் பயணம் செய்யத் துவங்குவான்.
====================================================

குரு மகராஜ் - ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர் :

* இறைவனே உலகம் என்ற நம்பிக்கை உறுதியாக உண்டானால் எல்லா பிரச்னைகளும் ஒழிந்து தீர்வு பெற்று விடுவீர்கள்.

* எவன் இறைவனைக் காண வேண்டும் என்று ஏங்கி அழுகிறானோ அவன் மீது இறைவனின் கருணை விழத் தொடங்கும்.

* உலக இன்பங்களில் மயங்கித் திரிபவன் இந்த பிறவியில் மட்டுமல்ல, எந்தப் பிறவியிலும் இறைவனை அடைய முடியாது.

* பணத்தின் மீது கொள்ளும் மோகம் மனிதனைப் பைத்தியமாக்கிவிடும். காமம் மனிதனை இறைவனிடமிருந்து பிரித்து விடும் தன்மை கொண்டது.

* படிப்பதைக் காட்டிலும் கேள்வி ஞானம் மிகவும் உயர்ந்தது. கேட்பதைக் காட்டிலும் நேரில் காண்பது அதைவிடச் சிறந்தது.

* இறைக்காட்சி கிடைத்த பின்பே மனிதனிடம் இருக்கும் அறியாமை முற்றிலும் அகலும். மன வலிமை படைத்தவர்களால் மட்டுமே உலக ஆசைகளைத் துறக்க முடியும்.

* கடவுள் நமக்கு முதலாளியாக இருக்கிறார். நாம் அவரது வேலைக்காரர்கள். அவனுக்கு பணிவிடை செய்வது தான் பிறவிப்பயன்.

* மனிதவாழ்வின் சாரமே பக்தியாக இருப்பது தான். பக்தி கொள்ளாதவர்கள் வாழும் வாழ்வில் அர்த்தமில்லை.

* நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுங்கள். அதே நேரத்தில் மனதை ஆண்டவனிடம் வைத்திருங்கள். 


Read more: http://www.livingextra.com/2012/03/blog-post_21.html#ixzz1qEigvceZ
 

No comments: